இந்த கதவிற்குப் பின்....

>> Tuesday, December 30, 2008கதவு


பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூவிதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்கதவுகளே
தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பைகூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவுதிறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவுதிறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்றுகேட்காதே
ஒரு வேளைஅது
நீயாக இருக்கலாம்


-அப்துல் ரகுமானின் "பித்தன்" தொகுப்பிலிருந்து

Read more...

கதவை திற காற்று வரட்டும்

>> Wednesday, December 17, 2008


ஒரு ஜென் ஞானி, மலையையொட்டி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரையோரத்தில் நின்று கொண்டு நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மினுமினுப்பையும் கண்டு ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்.
அந்த நதிக்கரையோரத்தில் துன்பங்களை மட்டுமே கண்டு நொந்துபோன ஒருவன், குடிசையில் அடைந்து கொண்டு “வாழ்க்கை துக்ககரமானது! வாழ்க்கை துக்ககரமானது! என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
இதைக்கேட்ட ஞானி, “இல்லையப்பா. வாழ்க்கை ஆனந்தமானது. குடிசையைவிட்டு வெளியே வந்துபார். உனக்குத் தெரியும்” என்றார். துறவியின் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
முதலில் கதவைத் திறந்து வை. காற்று உள்ளே வரட்டும். உன்னைத் தேடி வரும் தென்றல் உன்னை வெளியே கொண்டு வரும்” என்று சொன்னார் ஞானி. அதையும் அவன் கேட்கிற மாதிரி இல்லை.
உடனே அந்த ஞானி, ” அடடே….ஆபத்து! ஆபத்து! உன் குடிசையில் தீப்பிடித்துவிட்டது” என்று கத்தினார். குடிசை எரிகிறது என்றவுடன் பதறியடித்துக்கொண்டு அவன் வெளியே ஓடி வந்தான்.
வந்தவனைப் பிடித்திழுத்து வானத்தைக் காட்டினார் ஜென் ஞானி. மேலே ஒளிரும் நிலவின் அழகையும், நட்சத்திரங்களின் மின்னுவதையும், அருகே சலனமற்று ஓடும் ஆற்றையும் கண்டு பரவசப்பட்டு நின்றான்.
‘குடிசையை விட்டு வெளியே வா… அழகைக் கண்டு ஆராதிக்கலாம் என்று அழைத்தபோது அவன் குட்கவில்லை. அவனோ கடவுள் நம்பிக்கை இல்லாதவன். எனவே, ‘பரம்பொருளைக் காணலாம் மோட்சம் அடையலாம்” என்று அவனிடம் சொல்லிப் பிரயோஜனமில்லை. பிறகு அவனை எப்படித்தான் வெளியே அழைத்து வருவது?
அதற்கு அந்த ஜென் ஞானி பயன்படுத்திய டெக்கினிக்தான், “ஆபத்து! குடிசை தீப்பற்றி எரிகிறது” என்று கத்தியது.

விதை வெடிக்க பயந்தால், விருட்சம் எழாது.
புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப்பூச்சியாய் வானில் வெளியே வர முடியாது.
நீரில் குதிக்க பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.
கதவைத் திறக்க பயந்தால், காற்றை உள்ளே அனுமதிக்க முடியாது.
கதவைத் திறந்து வையுங்கள். காற்று உள்ளே வரட்டும்.


கருத்து: பரமஹம்சஸ நித்யானந்தர்.

Read more...

எளிதும் அரிதும்...

எது எளிது? எது அரிது?

* எல்லோரது முகவரி புத்தகத்திலும் இடம் பெறல் எளிது
எல்லோரது இதயத்திலும் இடம் பெறல் அரிது.

* அடுத்தவர் தவறை கண்டறிதல் எளிது.
தனது தவறை உண்ர்ந்திடல் அரிது.

* மன்னித்தல் எளிது.
மன்னிக்க வேண்டுதல் அரிது.

* விதிகளை வகுத்தல் எளிது
அதன்படி நடத்தல் அரிது.

* தவறுகள் செய்வது எளிது
தவறுகளில் பாடம் கற்பது அரிது.

Read more...

சில அலற வைக்கும் உண்மைகள்

>> Sunday, December 14, 2008

1. APPY FIZZ அருந்த எண்ணமா? சற்று யோசிக்கவும்.அதில் புற்றுநோய் காரணிகள் இருப்பதாக தகவல்.2. கோக் அல்லது பெப்சி சாப்ப்பிடும் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ Mentos சாப்பிடவேண்டாம். ஏனெனில் இந்த இரண்டின் கலவை சயனைடாக மாறி உங்கள் உயிரை பறிக்கலாம்.


3. kurkure சாப்பிட வேண்டாம்.அதில் அதிக அளவு பிளாஸ்டிக் கலந்திருப்பதாக Times of India தகவல் தெரிவிக்கிறது.சந்தேகம் இருந்தால் kurkure வை எரித்து பார்த்தால் பிளாஸ்டிக் பொசுங்கும் வாசனை உணரலாம்.


4. கீழ்க்காணும் மாத்திரைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
* D cold
* Vicks action- 500
* Actified
* Coldarin
* Cosome
* Nice
* Nimulid
இவையெல்லாம் வலிப்பு போன்ற நோய்களை
வரவழைக்கும் என அமெரிக்காவில் தடை
செய்யப்பட்டுள்ளனவாம்.


5. தெருவோர வியாபாரிகளிடம் அனுதாபப்பட்டு Cotton Ear Buds எதையும் வாங்கி உபயோகிக்க வேண்டாம்.ஏனெனில் இந்த Cotton Ear Buds அனைத்தும் மருத்துவமனைகளில் ஏற்கனவே உபயோகித்து கழிக்கப்பட்ட பஞ்சினால் தயாரிக்கப்படுகின்றனவாம்.இதனால் Herpes Zoster Oticus
எனும் வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் காதுகள் ஆளாக
நேரிடும்.


6. உங்கள் செல்பேசியினை தொடர்பு கொண்டவர் மறுமொழி தரும் வரை உங்கள் காதுகளின் அருகில் கொண்டு செல்ல வேண்டாம்.ஏனெனில் டயல் செய்தவுடன் செல்பேசி தனது உச்சபட்ச சிக்னலை
வெளியிடுகிறது(2watts = 33dbi) .


தகவல் உதவி : நண்பர் அருள்.

Read more...

கடவுள் ஏன் கல்லானான் ?

>> Friday, December 5, 2008

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலே சொற்பொழிவாற்றப் போயிருந்தார். அங்கே ஒரு அமெரிக்கப் பெண்மணி அவரிடம் வந்தாள்.

அவரைப் பார்த்து, "இந்தியர்கள் அனைவரும் முட்டாள்கள் என்பதே எனது கருத்து" என்றாள்.

இவரும் கோபம் கொள்ளாமல் "ஏன்" என்று சாந்தமாகக் கேட்டார்.

அதற்கு அவள் " நீங்கள் முட்டாள்தனமாகக் கல்லை வைத்துகொண்டு, இதுதான் கடவுள் என்கிறீர்களே? அதனால்தான்" என்றாள்.

அவர் சிரித்தபடி, " அம்மணி, ஆதிகாலத்திலே மனிதன் நெருப்பை எப்படி உண்டாக்கினான்?." என்று கேட்டார்.

" இரண்டு கற்களை உரசித்தான் நெருப்பினை உண்டாக்கினார்கள் என்றாள். விவேகானந்தர் சிரித்தபடி, " இதனால் கல்லுக்கு மின்சார சக்தி இருக்கிறதல்லவா?அதைப் போலவே இன்று உலகெங்கும் மின்சாரம்தானே அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, இந்த உலகின் ஆதாரமே கல்தான்.அதைத்தான் நாங்கள் கடவுள் என்று வணங்குகிறோம்" என்று கூற அவள் வாயடைத்துப் போய்விட்டாள்.

Read more...

இன்னும் சில கவிதைகள்.

>> Thursday, December 4, 2008

" பரமக்குடி ஆயிர வைசிய துவக்க நிலையிலும்
செந்தூர் சரவணய்யர் நடுநிலையிலும்
காரப்பேட்டை நாடார் மேனிலையிலும்
மதுரை யாதவர் கல்லூரி நிலையிலும்
வருடா வருடம் சளைக்காது
சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
'சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்,,,"
--- .மதிவண்ணன்

சுற்றிலும் முட்களிருந்தும்
சிரிப்பை விடவில்லையே-ரோஜாப் பூ
- இரா. பார்த்திபன்

Read more...

நான் ரசித்த சில ஹைக்கூ கவிதைகள்

>> Monday, November 24, 2008

என்னருகில் அமர்ந்திருப்பவர்
எழுந்திருப்பதாய் தெரியவில்லை
கர்ப்பிணிப்பெண் நிற்கிறாள்......
- எல்.இளங்கோ.
**************************************
நிமிர்ந்து நின்றது புல்
வளைத்துக் காட்டியது
ஒரே ஒரு மழைத்துளி
-ப.ஆனந்தன்
*****************************************
அப்பாவுக்கு
அறுபதனாயிரம் மனைவிகள்
இருந்தும் சந்தேகம் இல்லை.
ராமனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்.
-கபிலன்
********************************************

Read more...

கணக்கினால் தவறிய காதல்

>> Sunday, November 23, 2008


கணக்கில் தவறு செய்ததால் காதல் பாடத்தில் ஒரு கவிஞன் தோற்றான்.காதலிப்பவர்களுக்கு ஒரு காவியம் கிடைத்தது...

இதோ அந்த காதல் தோற்றதும் காவியம் பிறந்ததும்....

குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியைப் பார்த்துக் காதல் கொள்கிறான் கம்பரின் மகன் அம்பிகாபதி. அரசன் குலோத்துங்க சோழன் கோபம் கொண்டு, அம்பிகாபதியிடம் காதலை மறந்து விடும்படி கேட்கிறான். அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் மனம் ஒத்த தெய்வீக காதல் இருந்தமையால் அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய இருவருமே மறுக்கின்றனர். சோழன் காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல் அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று அறிவிக்கிறான். அம்பிகாபதியும் தன் காதல் மேல் அத்தனை நம்பிக்கையுடன் போட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். சபை கூடுகிறது. புலவர் ஒட்டக்கூத்தரும் அவையில் இருக்கிறார், காதலி அமாராவதியோ திரை மறைவில் தன் காதலுக்கு ஜெயம் உண்டாகப் பிரார்த்தனை செய்கிறாள். பாடல் ஆரம்பமாகிறது. கவியரசர் கம்பரும் அங்கே மன வருத்தத்துடன் இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி கைகளில் இருக்கும் பூக்களிலிருந்து ஒரு பூவை எடுத்து வைக்கிறாள். நூறாவது பாடலும் வந்தது வெற்றிக்களிப்பில் அமராவதி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரை மறைவிலிருந்து ஓடி வருகிறாள். அவள் அழகில் அம்பிகாபதி தன்னை மறந்து
"சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட துவள் கொள் செவ்வாய்
நற்றேனிழொழுக நடன சிங்கார நடையழகில்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே" என்று பாட
அவ்வளவுதான், ஒட்டக்கூத்தர் "முதல் செய்யுள் காப்புச் செய்யுள் ஆகையால் அதைத் தவிர்த்து 99 பாடல்கள்தான் ஆகிறது. ஆகையால் இவன் போட்டியில் ஜெயிக்கவில்லை" என்றார்.
சோழனும் உடனே மரணதண்டனை பிரகடனம் செய்தான். மரணதண்டனை ஒருவருக்கும் தெரியாமல் நிறைவேற்றப்படுகிறது. தன் உயிர்க் காதலன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அமராவதி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
பாடல்களை அமராவதி சரியாக எண்ணியிருந்தால் காதல் வென்றிருக்கும்.ஒரு காவியம் தோன்றாமல் போயிருக்கும்.
இக்கால காதலருக்கும் இதில் ஒரு செய்தி ஒளிந்திருக்கிறது.காதலில் வெல்ல கடைசி வரை தாக்குபிடிக்கவேண்டும்.சிறிய பிசகு கூட தோல்விக்கு இட்டு செல்லலாம்.

Read more...

சில சூஃபி கவிதைகள்

>> Friday, November 21, 2008

விரிந்த வெட்டவெளியில்
விரவி கலந்திருந்தோம்
எங்கும் நிசப்தமாய்
எதிரொலித்தன நம் குரல்கள்..

*****************************************************
நிரம்பி வழிகிறது தனிமை
நிசப்தமாய் இருக்கிறது மனம்
பேசப்படாமல் கிடக்கின்றன வார்த்தைகள்
கேட்க்கப்படாமல் உள்ளது மௌனம்

*****************************************************

Read more...

இப்படி கூட யோசிக்கலாமோ?

>> Thursday, November 20, 2008கணிணி என்ற சொல் ஆண்பாலா இல்லை பெண்பாலா?
ஸ்பெயின் தேசத்தில் ஒரு வகுப்பில் ஆசிரியர் ஸ்பானிஷ் பொழியைப பற்றி விளக்கும்போது கூறினார் " ஸ்பானிஷ் பொழியில் பொருடகளுக்கான பெயர்கள் ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ இருக்கலாம். உதாரணமாக வீடு எனற சொல் பெண்பால் பென்சில் என்ற சொல் ஆண்பால்".

ஒரு மாணவன் கேட்டான் " கணிணி எந்த பாலைச் சேர்ந்தது?"

இந்தக் கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் ஆசிரியர் ஆண் மாணவர்களை ஒரு குழுவாகவும் பெண் மாணவர்களை மற்றொரு குழுவாகவும் பிரித்து அவர்களை விடை அளிக்கச் சொன்னார்.

ஆண்கள் குழு கணிணி என்பது பெண்பாலே என்று தீர்மானித்தது.

ஏனெனில்

1. அதன் உள் அமைப்புகளை அதனை உருவாக்கியவர் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை.

2. மற்ற கணிணிகளுடன் அளவளாவ அவை பயன் படுத்தும் மொழிகள் வேறு யாருக்கும் புரிவதில்லை.

3. சிறு தவறுகள் கூட இவைகளின் ஞாபக சக்தியில் சேமிக்கப் படுகிறது பின்னால் பயன் படுத்த

4. ஒரு கணிணியை வாங்கியவுடன் அதனைச் சேர்ந்த உபகரணங்களுக்கும் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

பெண்கள் குழு தீர்மானித்தது கணிணி ஆண்பாலே என்று.

ஏனெனில்

1. இவைகளிடம் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளால் சொந்தமாக சிந்திக்க முடியாது.

2. எந்த ஒரு விஷயத்திலும் இவைகளை முடுக்கி விட வேணடும்.

3. இவைகள் நமது பிரச்னைகளைத் தீர்க்க வல்லவை. ஆனால் பெரும்பாலும் இவைகளே பிரச்னைகளாகி விடுகின்றன.

4. ஒரு கணிணியை வாங்கத் தீர்மானித்தவுடன் மார்கெட்டில் வேறொரு மாடல் வெளி வந்து அதை வாங்க தூண்டும்.

இறுதியில் பெண்கள் குழுவே வென்றது.

இப்படியும் யோசிக்கலாமோ??????

தகவல் உதவி : மதுரை மைந்தன்.

Read more...

நான் ரசித்த கவிதை...

>> Tuesday, November 18, 2008

முரண்பாடுகள்.
போதிமரம் போதும்
புத்தனைப் புதைத்துவிடு
காப்பாற்று
தேசத்துக்குத் தீயிடு
முக்கியம்
சித்தாந்தம் எரித்துவிடு
சிலை
கவிதைக்குக் கல்லறை
உரைபோதும் பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு
மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி
நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்குக் குப்பைக்கூடை
கற்றது மற
பட்டத்துக்குச் சட்டமிடு
பெட்டி தொலைத்துவிடு
சாவி பத்திரம்
தலைவனைப் பலியிடு
பாதுகை வழிபடு
அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு
பத்தினிக்கு உதை
படத்துக்குப் பூ
காதல் கவியெழுத
காமம் நாமெழுத
கற்பு முக்கியம்
கருவைக் கலை
பசியை விடு
கடிகாரம் பார்த்துண்
ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களைக் கொன்றுவிடு
முரண்பாடே நடைமுறையாய்
நடைமுறையே முறண்பாடாய்ச்
சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்
முரண்பாடெனக்குள் யாதென்று
மூளைபுரட்டி யோசித்தேன்
மிருகத்தைக் கொல்லாமல்
தேவநிலை தேடுகிறேன்.
-கவி பேரரசு வைரமுத்து.

Read more...

ஒரு ஜென் கதை..

>> Sunday, November 16, 2008

"கேளுங்கள் கொடுக்கப்படும்' - பைபிள்
கேட்பதெல்லாம் கிடைக்காது' - ஞானமொழி
கேட்டாலும் கேட்காவிட்டாலும், வேண்டியது வேண்டியபோது கொடுக்கப்படும்' - வேதம்.
இம்மூன்றையும் படித்து குழம்பிப் போன ஜென் மாணவன், குருவிடம் கேட்டான்,
"இம்மூன்றுமே ஞானக் கூற்றுகள். இதில் எது உண்மை, எது பொய்?''
குரு சொன்னார்
"மூன்றுமே உண்மை.''
குழம்பிப்போன மாணவன் "அதெப்படி மூன்றுமே உண்மையாகும்?'' எனக் கேட்டான்.
குரு, "நீ கேட்டதாலா இதயம் இயங்குகிறது. இல்லை நீ கேட்கவில்லை என்பதால் மூளை இயங்காமல் நின்றுவிடுகிறதா?ஆனால், நீ கேட்டால்தான் ருசியான உணவு கிடைக்கும். நீ கேட்டாய் என்பதற்காகக் கூரையைப் பிய்த்துக்கொண்டு பணத்தைக் கொட்டுவானா இறைவன்?'' எனக் கேட்டதற்கு, ""இல்லை'' என்றான், சீடன்.
தொடர்ந்த குரு, "தெரிந்து கொள்! உனக்குத் தேவையான எல்லா அடிப்படை விஷயங்களும், நீ கேட்காமலேயே கிடைக்கும். சுகபோகங்கள், நீ கேட்டால்தான் கிடைக்கும். அடங்காத ஆசைகள் மற்றும் தேவையற்ற காரியங்களை, நீ எவ்வளவு கேட்டுக் கொண்டாலும் அது கிடைக்காது.பார். நான் எதுவும் கேட்பதில்லை. இருந்தும் உன்னைவிட ஆனந்தமாக இருக்கிறேன். சூட்சுமம் புரிகிறதா?'' என்றார்.

Read more...

குசும்பனின் சூப்பர் கார்டூன்கள்.

>> Friday, November 14, 2008மேலும் ரசிக்க http://kusumbuonly.blogspot.com/

Read more...

பாஞ்சாலி சூத்திரம்


பரபரப்பூட்டும் இன்றைய பத்திரிகைகள் காலத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடந்திருந்தால் 'கணவனைக் கவர்வது எப்படி? ராணிகளுக்குள் லடாய்' என்பன போன்ற தலைப்புகள் வர மக்கள் கவர்ச்சியுற்று பத்திரிகைகளை வாங்கிப் படித்து அதன் விற்பனையை அதி வேகமாக உயர்த்தி இருப்பார்கள். ஆனால் புத்திமான்களுக்கெல்லாம் புத்திமானான வியாசர் இதைப் போகிற போக்கில் பாரதத்தில் சொல்லிக் கொண்டு போகிறார். இன்றைய மங்கையருக்கு ஏற்ற அற்புத அறவுரைகளை அன்றே மகாபாரதம் சொல்லியிருப்பதுதான் அருமையிலும் அருமை!

பாண்டவர்களும், பாஞ்சாலியும் இருந்த காம்யக வனத்தில் மார்க்கண்டேயர் வருகையில் கிருஷ்ணனும் அவனது ராணி ஸத்யபாமையும் அங்கே வந்திருக்கின்றனர். இரு ராணிகளும் ஒருவரை ஒருவர் கண்டு பரஸ்பரம் எல்லா விஷயங்களையும் பற்றி பேசிக்கொண்டு வருகையில் ஸத்யபாமை திரௌபதியிடம், "பாண்டவர்கள் உனக்கு எப்பொழுதும் வசப்பட்டிருக்கிறார்கள் அல்லவா?அவர்கள் எவ்வாறு ஒருவரிடத்து ஒருவர் பொறாமைப் படாமல் இருக்கிறார்கள்? விரதானுஷ்டானமா? அல்லது தவமா? ஸ்நானமா? மந்திரமா? ஷதங்களா? வித்தையினுடைய சக்தியா? தளராத யௌவன முதலியவற்றின் சக்தியா? ஜபமா? ஹோமமா? அப்படியே மை முதலிய மருந்துகளா? எதனால் அந்தப் பாண்டவர்கள் உன் முகத்தையே பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்? இந்த உண்மையை எனக்குச் சொல்" என்கிறார். மருந்தா, மை போட்டு வைத்திருக்கிறாயா, மணி மந்திர ஷதமா என்று ஸத்யபாமை நுட்பமான தாம்பத்ய விஷயத்தில் கேட்டது பாஞ்சாலிக்குப் பிடிக்கவில்லை. "ஸத்யா! கெட்ட பெண்களுடைய நடையைப் பற்றி என்னிடம் கேட்கிறாயே! துஷ்ட வழியில் என்னால் எப்படிப் பதில் கூற முடியும்? கிருஷ்ணனுடைய மனைவியான நீ எப்படி இப்படி புத்தி கெட்டுப் போயிருக்கிறாய்? என்று ஒரு வித ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் கேட்கிறாள் அவள். "மந்திரத்தினாலும் மூலிகைகளாலும் வசப்படுத்தும் ஒரு மனைவி வீட்டில் கணவன் இருப்பது, பாம்புடன் குடியிருக்கும் வீட்டில் இருப்பது போல அல்லவா ஆகும்!" என்று கூறி அவளைக் கடிந்து கொள்கிறாள். பின்னர் தான் எப்படிப் பாண்டவர் மனதிற்கு உகந்தவளாய் இருக்க முடிகிறது என்பதை மிக விரிவாக விளக்குகிறாள். இந்த விளக்கம் தான் பஞ்ச கன்யாக்களான அஹல்யா, திரௌபதி, தாரா, மண்டோதரி, சீதா ஆகியோரில் திரௌபதி இடம் பெற்றதின் சிறப்பை நமக்கு விளக்குகிறது. "அன்னியப் புருஷனை நினைக்க மாட்டேன். வீட்டிற்கு களைத்து வரும் கணவனை இன்முகத்துடன் வரவேற்பேன். அவர்கள் உறங்கிய பின்னர் உறங்கி அவர்கள் எழு முன்னர் எழுந்திருப்பேன். மாமியாரை விட அதிக அலங்காரம் செய்து கொள்ள மாட்டேன். கணவர் கூறியது அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும் கூட என் வாயால் முதலில் அதை நான் கூற மாட்டேன். இங்கு அரண்மனையில் லட்சம் வேலைக்காரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரின் பெயரையும் நான் அறிவேன். அவர்களுக்கு உரிய வேலையை நானே தருகிறேன். பாண்டவர்களது சொத்தின் மதிப்பு எனக்கு ஒருத்திக்கு மட்டுமே தெரியும். அன்றாட வரவு செலவை தினமும் பார்க்கிறேன். இப்படி இருக்கையில் என்னைப் போய் கெட்ட பெண்கள் செய்யும் காரியங்களுடன் தொடர்புப் படுத்திவிட்டாயே" பாஞ்சாலியின் அஸ்திரம் போன்ற வாக்கியங்கள் ஸத்யபாமையைக் கூர்மையாகத் தாக்கவே அவள் உடனடியாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறாள். "என்னுடைய குற்றத்தைப் பொறுத்துக் கொள்" என்று வேண்டிய ஸத்ய பாமை, "சகிகளுக்கு பரிகாசத்துடன் கூடிய ஸல்லாபமானது இஷ்டப்படி நடக்கிறது அல்லவா?" என்று கூறி அதை அத்தோடு விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறாள்.

ஒரு உண்மை மனைவிக்கான இலக்கணத்தையும், அவள் எப்படி உண்மையான கவர்ச்சி மூலம் கணவனைக் கவர முடியும் என்பதையும் விவரிக்கும் பாஞ்சாலியின் கவர்ச்சிச் சூத்திரம் வனபர்வத்தில் (திரௌபதி ஸத்யபாமா ஸம்வாத பர்வம் என்ற உபபர்வம்) மிக விளக்கமாக உள்ளது. இதைப் படித்து மங்கையர் கடைப்பிடித்தால் இன்றையக் குடும்ப கோர்ட் கவுன்ஸிலிங்கே இல்லாமல் ஆகி விடும். பெண் சக்தியால் அர்ஜுனனுக்கு உள்ள பத்துப் பெயரில் உள்ள சக்தியையும் அடக்கி ஆள முடியும் என்பதைக் காட்டியதோடு தர்மனின் அறம், பீமனின் பலம் ஆகியவற்றையும் அடக்கி ஆண்ட பெரும் சக்தியாக வியாசர் பாஞ்சாலியை உருவகப்படுத்தி விளக்குவது படித்து உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று!

நன்றி : ஞான ஆலயம் ஜூலை 2007

Read more...

பார்த்தனின் பத்து பெயர்கள்

>> Monday, November 10, 2008ஊர்வசியே கவர்ச்சியுறும்படியான அற்புத அழகைக் கொண்டவன் அர்ஜுனன். அவனுடைய பத்துப் பெயர்கள் அர்ஜுனப் பத்து என்று அழைக்கப்பட்டு இன்றும் 'சொன்னவர்களைக் காக்கும்' என்ற நம்பிக்கை கிராமப் புறங்களில் கூட உள்ளது.
அர்ஜுனன்
பல்குனன்
ஜிஷ்ணு,
கிரீடி
ஸ்வேதவாஹனன்
பீபத்ஸூ
விஜயன்
பார்த்தன்

ஸவ்யஸாசி
தனஞ்சயன்

என்ற பத்துப் பெயர்களும் அவன் குணத்தினால் அமைந்தவை. விராடபுத்திரனாகிய உத்தரன் அர்ஜுனனை யார் என்று தெரியாமல் அவனை வினவும் போது என்றுமே தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளாத அர்ஜுனனே தன்னைப் பற்றிக் கூறி பெயர்களின் விளக்கங்களை அவனுக்குத் தருகிறான்:-
"அனைத்துத் தேசங்களையும் ஜெயித்து அங்கிருந்து கொண்டு வந்த மிகுதியாகக் கொட்டிக் குவிந்த அந்த செல்வங்களின் - தனங்களின் மத்தியில் நான் நின்றதால் என்னை தனஞ்சயன் என்கின்றனர்.
யுத்தத்தில் யாரையும் வெல்லாமல் நான் திரும்பியதில்லை என்பதால் என்னை விஜயன் என்கின்றனர்.
என் ரதத்தில் பொன்மயமான கவசமுள்ள வெள்ளைக் குதிரைகள் கட்டப்பட்டிருப்பதால் என்னை ஸ்வேத வாஹனன் என்கின்றனர்.
இந்திரனால் கொடுக்கப்பட்ட கிரீடம் சூரியன் போல ஒளி வீசியிருக்கும்படி அதை நான் அணிவதால் கிரீடி என்கின்றனர்.
போரின் போது ஒருக்காலும் யாரும் அருவருக்கத்தக்கக் காரியத்தை நான் செய்வதில்லை என்பதால் என்னை பீபத்ஸூ என்கின்றனர்.
போரில் காண்டீவத்தை இழுக்கும் போது என் இரு கைகளும் ஒத்த செய்கை செய்தாலும் என் இடக்கை வலக்கையை விடச் சற்று மேலாக இருக்கிறது. ஆகவே என்னை ஸவ்யஸாசி என்கின்றனர்.
என்னுடைய தேகத்தின் நிறம் வேறு யாரும் அடைய முடியாமல் அருமையாக எனக்கு மட்டுமே உரியதாக இருக்கச் சிறந்த ரூபத்தை உடையதால் என்னை அர்ஜுனன் என்கின்றனர்.
நான் உத்தர பல்குனி, பூர்வ பல்குனி நட்சத்திரங்களின் சந்தியில் பிறந்ததால் என்னைப் பல்குனன் என்கின்றனர்.
என்னுடைய உடலிலாவது என்னுடைய தமையனார் உடலிலாவது ஒரு சொட்டு ரத்தத்தை ஏற்படுத்துவோரின் குலத்தையே நான் சும்மா விட மாட்டேன், அவமதிப்பேன் என்பதால் என்னை ஜிஷ்ணு என்கின்றனர்.
என் தாயார் ப்ருதை என்ற பெயர் உடையவள், அவளுக்குப் பிறந்ததால் என்னைப் பார்த்தன் என்கின்றனர்".
(கோக்ரஹண பர்வம்-விராட பர்வத்தில் உள்ள உப பர்வம்)
நன்றி : ஞான ஆலயம் ஜூலை 2007

Read more...

எனது சிந்தனையும் இப்படித்தான் செல்கிறது.

>> Sunday, November 9, 2008“கடிகாரம், காலம் பற்றி அறியுமா?
நிறைவேராத பிரார்த்தனைகள் எங்கு சென்றிருக்கும்?
முதல் மனிதனின் கடைசி ஆசை என்னவாக இருந்திருக்கும்?
மரங்களை போல் மலைகளுக்கும் வேர் உண்டா?
சாமிக்கு உடைத்தாலும் சமையலுக்கு உடைத்தாலும் ஏன்ஒரே நாளில் தேங்காய் அழுகிவிடுகிறது?
சூரியனுக்கு நிழல் உண்டா?
தான் வளர்த்த மரத்தை எந்த வேர்களாவதுவெளிவந்து பார்த்தது உண்டா?நிறங்கள் ஏதும் அற்ற நிறம்தான் கருப்பா?
குனிந்தபோது சட்டையிலிருந்து சிதறிய சில்லரையாய்எதிர்பாராமல் ஓடுகிறது என் சந்தேகங்களும்…”
கவிதை உதவி -பிலால் ராஜா

Read more...

மீண்டும் சுனாமியா?

>> Saturday, November 8, 2008


மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன.கடலுக்கடியில் பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.
மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமேஉணர முடியும்.ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த http://www.petquake.org/ என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே கருதுகின்றனர்.
என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) திரு.முஹம்மது இஸ்மாயீல். (இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்திற்க்காக)+919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்தின் "ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யின் (http://www.ina.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவார். அதன் பிறகு "இறைவன் நாடினால்" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை முன்னறிய இன்று வரை எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க 100% இலவச சேவையாகும்.
மேலும் தொடர்பிற்கு http://www.ina.in/itws/

Read more...

படிக்க வேண்டிய சில புத்தகங்கள் - 2

>> Friday, November 7, 2008


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைத்தவை
1) பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம் - பி.ஆர். ராஜம் அய்யர்
3) கிளாரிந்தா - மாதவையா
4) நாகம்மாள் - ஆர் சண்முக சுந்தரம்
5) தில்லான மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
6) பொன்னியின் செல்வன் - கல்கி
7) வீரபாண்டியன் மனைவி - அரு.ராமநாதன்
8) சயாம் மரண ரயில் - ரெ. சண்முகம்.
9) லங்காட் நதிக்கரை - அ.ரெங்கசாமி
10) தீ.- எஸ். பொன்னுதுரை.
11) பஞ்சமர் - டேனியல்
12) பொய்தேவு - க.நா.சுப்ரமணியம்.
13) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
14) அபிதா - லா.ச.ராமாமிருதம்.
15) நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம்
16) பசித்த மானுடம் - கரிச்சான்குஞ்சு
17) அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்�
18) மோகமுள் - தி. ஜானகிராமன்
19) மரப்பசு - தி.ஜானகிராமன்
20) வாசவேஸ்வரம் - கிருத்திகா
21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
22) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
23) பாரீஸிக்கு போ - ஜெயகாந்தன்
24) புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்
25) கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்
26) நினைவுப்பாதை - நகுலன்
27) நாய்கள் - நகுலன்
28) ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
29) ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்- சுந்தர ராமசாமி
31) கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
32) சாயாவனம் - சா. கந்தசாமி
33) தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி
34) நாளை மற்றுமொரு நாளே - ஜீ. நாகராஜன்
35) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
36) கருக்கு -பாமா
37) கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்
38) வாடாமல்லி - சு.சமுத்திரம்.
39) கல்மரம் - திலகவதி.
40) போக்கிடம் - விட்டல்ராவ்
41) புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
42) கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்
43) பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்ரன்
44) ஒற்றன் - அசோகமித்ரன்
45) இடைவெளி - சம்பத்
46) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்
47) தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
48) கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்
49) அசடு - காசியபன்
50) வெக்கை - பூமணி
51) பிறகு - பூமணி
52) தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
53) எட்டுதிக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்
54) ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
55) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
56) சந்தியா - பிரபஞ்சன்
57) காகிதமலர்கள் - ஆதவன்
58) என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
59) ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
60) உடையார் - பாலகுமாரன்
61) கரிசல் - பொன்னிலன்
62) கம்பாநதி - வண்ணநிலவன்
63) கடல்புரத்தில் வண்ணநிலவன்
64) பழையன கழிதலும் - சிவகாமி
65) மௌனப்புயல் - வாசந்தி
66) ஈரம் கசிந்த நிலம் - சி. ஆர் ரவீந்திரன்
67) பாய்மரக்கப்பல் - பாவண்ணன்.
68) பாழி - கோணங்கி
69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழவன்
70) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்.
71) கோவேறு கழுதைகள் - இமையம்
72) செடல்- இமையம்
73) உள்ளிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன்.
74) வெள்ளாவி - விமல் குழந்தைவேல்
75) கரமுண்டார்வீடு - தஞ்சை பிரகாஷ்
76) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
77) காடு- ஜெயமோகன்
78) கொற்றவை ஜெயமோகன்
79) உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
80) நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன்
81) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்,
82) கூகை சோ.தர்மன்
83) புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்.
84) ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா
85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா
86) சொல் என்றொரு சொல் - பிரேம் ரமேஷ்
87) சிலுவை ராஜ் சரித்திரம்- ராஜ்கௌதமன்
88) தகப்பன்கொடி - அழகிய பெரியவன்.
89) கொரில்லா - ஷோபா சக்தி
90) நிழல்முற்றம் - பெருமாள் முருகன்
91) கூளமாதாரி - பெருமாள் முருகன்
92) சாயத்திரை- சுப்ரபாரதிமணியன்
93) ரத்தஉறவு - யூமாவாசுகி
94) கனவுச்சிறை - தேவகாந்தன்�
95) அளம் - தமிழ்செல்வி
96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.- எம்.ஜி.சுரேஷ்
97) அரசூர் வம்சம் - இரா.முருகன்
98) அஞ்சலை - கண்மணி குணசேகரன்
99) குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்
100) ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்

Read more...

படிக்க வேண்டிய சில புத்தகங்கள் - 1எழுத்து சித்தர் பாலகுமாரன் பரிந்துரைப்பவை
கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.
மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.
புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்.
சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.
பொன்னியின் செல்வன் - கல்கி.
வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன்.
தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.
மோகமுள்,செம்பருத்தி -தி.ஜானகிராமன்.
பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.
எங்கே போகிறோம் - அகிலன்.
ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.
ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.
18 வது அட்சக்கோடு,கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.
அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.
சாயாவனம் -சா. கந்தசாமி.
குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி.
குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா.
கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்.
கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.
கடல்புரத்தில் -வண்ணநிலவன்.
சிறகுகள் முறியும் -அம்பை.
என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.
இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.
தேவன் வருகை -சுஜாதா.
யவனராணி -சாண்டில்யன்.
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.
ஒரு மனுஷி -பிரபஞ்சன்.
கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.
நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.
அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.
பச்சைக்கனவு - லா.ச.ரா.
தலைமுறைகள் -நீலபத்மநாபன்.
ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.
பிறகு -பூமணி.
புத்தம் வீடு -ஹப்சி.
பா.ஜேசுதாசன்.
நுணலும்,புனலும் -ஆ.மாதவன்.
மௌனி சிறுகதைகள் -மௌனி.
நினைவுப்பாதை -நகுலன்.
சம்மதங்கள் -ஜெயந்தன்.
நீர்மை -ந.முத்துசாமி.
சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம்.
புதிய கோணங்கி - கிருத்திகா.
வாசுவேஸ்வரம் - கிருத்திகா.
தரையில் இறங்கும் விமானங்கள் - சிவசங்கரி.
கடலோடி - நரசையா.
படகு வீடு - ரா.கி.ரங்கராஜன்.
வழிப்போக்கன் - சாவி.
மூங்கில் குருத்து - திலீப்குமார்.
புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்.
ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.
ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.
மிஸ்டர் வேதாந்தம்,
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.
கவிதைகள்அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.
பெரியபுராணம் - சேக்கிழார்.
நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.
அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.
வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.
தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.
வரும்போகும் - சி. மணி.
சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.
கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.
ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.
நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.
கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.
வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.
பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.
சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி.
வளரும் தமிழ் - தமிழண்ணல்.
மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.
வாழ்க்கை சரித்திரம்என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.
காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.

Read more...

முதல் வணக்கம்

>> Thursday, November 6, 2008


* பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோஎந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோசந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோஅந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம்.
* உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்தஉலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.
* இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும்தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.
* மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலானதீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
* செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
* வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகையவேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பரநாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
* மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
* பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன்பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவானதேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.

Read more...

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP