இந்த கதவிற்குப் பின்....

>> Tuesday, December 30, 2008



கதவு


பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூவிதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்கதவுகளே
தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பைகூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவுதிறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவுதிறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்’ என்றுகேட்காதே
ஒரு வேளைஅது
நீயாக இருக்கலாம்


-அப்துல் ரகுமானின் "பித்தன்" தொகுப்பிலிருந்து

1 comments:

தேவகிமைந்தன் January 10, 2009 at 1:58 AM  

அப்துல் ரகுமானின் அழகான கவிதையை வாசிக்க கொடுத்த நண்பர் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்.

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP