திருக்குறுங்குடி தரிசனம்

>> Sunday, January 25, 2009ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் நாளன்று புனித கோவில்களுக்கு சென்று வருவது வருடத்தின் நல்ல துவக்கமாக அமைவதால்,தற்போது நிறைய பேர் இப்படி பயணங்களை மேற்கொள்கின்றனர்.இந்த வகையில் நானும் எனது குடும்பத்துடன் கடந்த 3 வருடங்களாக ஜனவரி முதல் நாளன்று(ஆங்கிலப் புத்தாண்டை நாம் அனுசரிக்க வேண்டியதில்லை என்ற போதிலும்) சில பிரசித்தமான திருக்கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன்.

கடந்த 2 வருடங்களாக திருக்குறுங்குடி என்ற திருத்தலம் சென்று வருதலால் இம்முறை அந்த திருக்கோவிலைப் பற்றி இங்கு பதிவு செய்கிறேன்.

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் நான்குநேரியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஏர்வாடி என்னும் ஊர் வழியாக இந்த ஊருக்கு வரவேண்டும்.ஒரே திருத்தலத்தில் பெருமாள் 5 நம்பியாக அருள் பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.இவ்வூரின் முக்கிய கோவிலினுள்ளேயே பெருமாள் நின்ற நம்பியாக(சுந்தர வடிவழகுடைய நம்பி) நின்ற கோலத்திலும்,கிடந்த நம்பியாக சயன கோலத்திலும்,இருந்த நம்பியாக அமர்ந்த கோலத்திலும் காட்சியளிக்கிறார்.இந்த மூர்த்தங்கள் அனைத்துமே சிலை,அதன் மேல் சுதை,அதன் மேல் மூலிகை வண்ணம் என நிர்மாணிக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.மெல்லிய தீப ஒளியில் வண்ணம் கொண்ட பெருமான் சேவை சாதிப்பது மனம் ஒடுங்க வைக்கும் மெய் நிகழ்வாகும்.இத்திருக்க்கோவிலினுள்ளே கிழக்கு நோக்கி சேவை சாதிக்கும் நம்பி ,மேற்கு பார்த்து கோவிலினுள்ளேயே எழுந்தருளியுள்ள மஹேந்திரகிரிநாதர் என்னும் திருப்பெயர் கொண்ட சிவபெருமானுக்கு தோற்ற்ம் அளித்த்தாக தல வரலாறு.ஆகவே இந்த வைணவக் கோவிலினுள்ளே சிவனுக்கும் தனி சன்னதி இருப்பது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.பிற்காலத்தில் இதுவே சில நீடிக்கும் சர்ச்சைகளுக்கும் காரணமாகி விட்டாலும்,எளிய பக்தர்களை இவையெல்லாம் பாதிப்பதில்லை.அழகிய சிற்பங்கள் நிறைந்த இக்கோவிலினுள் ஓர் பாரம்பரியம் கண்டுகொள்ளப்படாமல் மறைந்திருக்கிறது.மூல கோபுரத்தின் உள்கூடு மரத்தினால் செய்யப்பட்டு அதனுள் அழகிய பல மரச்சிற்பங்கள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பாகும்.ஆனால் இதன் அருமை தெரியாத நம்மவர்கள் இதனை பாதுகாக்காதது மட்டுமல்லாமல் பராமரிக்காமலும் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.இக்கோவிலில் நம்பாடுவான் என்ற பக்தனுக்கு மோட்சத்தை அளித்த கைசிக ஏகாதசி மிகவும் பிரசித்தம். திருமங்கை ஆழ்வார் இத்தலத்தில் மோட்சமடைந்ததாக வரலாறு. பெரியாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்,நம்மாழ்வார் ஆகியோரால் மொத்தம் 40 பாசுரங்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.

இக்கோவிலில் அருள் பாலிக்கும் காலபைரவர் மற்றுமொரு விசேஷமாகும். பெருமாளின் மூர்த்தங்கள் போலவே பைரவரும் வண்ண கோலம் கொண்டிருப்பது தனிச்சிற்ப்பு. பைரவர் அருகே ஒளிரும் விளக்கின் ஒரு சுடர் மட்டும் காற்று அசைப்பது போல் தொடர்ந்து அசைந்து கொண்டிருக்கிறது. பைரவரின் மூச்சுக்காற்றில் சுடர் அசைவதாக ஐதீகம்.வேண்டும் வரம் தரும் காலபைரவருக்கு பூச்சட்டையும்,வடைமாலையும் பிரசித்தமான வேண்டுதல்கள். தனக்கான சன்னதி கோவிலுக்கு உள்ளேயா அல்லது வெளியேயா என்று நீதிமன்றத்திற்கும் பக்தர்களுக்கும் நடுவே காத்துக்கொண்டிருக்கும் மஹேந்திரகிரிநாதர் நிலைமை இந்து சமூகத்தில் இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் பிழைக்கு சாட்சி.

நான்காவது நம்பி திருப்பாற்கடல் நம்பியாக அரைக் கி.மீ தொலைவில் உள்ள கோவிலில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஐந்தாவது நம்பி ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மலைமீது நம்பியாற்றின் கரையிலே இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் சூழலிலே மலைமேல் நம்பியாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.பளிங்கு போல் பரிசுத்தமாக மலை நம்பியின் காலடியில் பாய்ந்து வரும்புனிதமான நம்பியாற்றின் குளியல் நிஜமாகவே கங்கைக்கு ஒப்பானதுதான்.இந்த புனித குளியலுக்கும் திவ்வியமான திருமாலின் தரிசனத்திற்கும் காட்டுப் பாதை பயணம் தான் சவாலான விஷயம்.சாலையே இல்லாத பாதையில் கற்களின் மீது சாகசமாக பயணிக்கும் ஜீப் பயண்ம் திகில் விரும்பிகளுக்கு உண்மையிலேயே ஒரு விருந்து தான்.”உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு” என்று சொல்ல கேட்டிருப்போம். உண்மையிலேயே இந்த பயணத்தில் உயிரை ஜீப்பின் கம்பியில் பிடித்துக்கொண்டு தான் பயணம்.தெம்பிருப்பவர்கள் நடந்தே செல்வது நலம்.

ஊரிலிருந்து 1 கி.மீ.தொலைவில் திருவட்டப்பாறை என்னும் இடத்தில் பகவான் இராமானுஜருக்கு ஒரு சன்னதி அமைந்துள்ளது.பெருமாள் இங்கு வடுக நம்பியாக இராமானுஜரை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றியதாக ஐதீகம்.இந்த சன்னதியில் பெருமாள் சீடனின் ரூபத்தில் காட்சியளிப்பதால் வைஷ்ணவ நம்பி என்றும் அழைக்கப்படுகிறார்.

பக்தி பயணமாக மட்டுமல்லாமல் மனம் மகிழும் பயணமாகவும் அமையும் இந்த ஊருக்கு வாய்ப்பிருந்தால் ஒரு முறை சென்று வாருங்களேன்.

4 comments:

Hariharan January 13, 2011 at 5:15 AM  
This comment has been removed by the author.
Hariharan January 13, 2011 at 5:17 AM  

thank u.
hari-kurungai.blogspot.com

ullam kavar kalvan October 8, 2011 at 5:27 AM  

Thank you. But thiruparkadal nambi is in sitting position. he is in satanding position only

ullam kavar kalvan October 8, 2011 at 5:28 AM  

Thank you. But thiruparkadal nambi is not in sitting position. he is in standing position only

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP