பாஞ்சாலி சூத்திரம்

>> Friday, November 14, 2008


பரபரப்பூட்டும் இன்றைய பத்திரிகைகள் காலத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடந்திருந்தால் 'கணவனைக் கவர்வது எப்படி? ராணிகளுக்குள் லடாய்' என்பன போன்ற தலைப்புகள் வர மக்கள் கவர்ச்சியுற்று பத்திரிகைகளை வாங்கிப் படித்து அதன் விற்பனையை அதி வேகமாக உயர்த்தி இருப்பார்கள். ஆனால் புத்திமான்களுக்கெல்லாம் புத்திமானான வியாசர் இதைப் போகிற போக்கில் பாரதத்தில் சொல்லிக் கொண்டு போகிறார். இன்றைய மங்கையருக்கு ஏற்ற அற்புத அறவுரைகளை அன்றே மகாபாரதம் சொல்லியிருப்பதுதான் அருமையிலும் அருமை!

பாண்டவர்களும், பாஞ்சாலியும் இருந்த காம்யக வனத்தில் மார்க்கண்டேயர் வருகையில் கிருஷ்ணனும் அவனது ராணி ஸத்யபாமையும் அங்கே வந்திருக்கின்றனர். இரு ராணிகளும் ஒருவரை ஒருவர் கண்டு பரஸ்பரம் எல்லா விஷயங்களையும் பற்றி பேசிக்கொண்டு வருகையில் ஸத்யபாமை திரௌபதியிடம், "பாண்டவர்கள் உனக்கு எப்பொழுதும் வசப்பட்டிருக்கிறார்கள் அல்லவா?அவர்கள் எவ்வாறு ஒருவரிடத்து ஒருவர் பொறாமைப் படாமல் இருக்கிறார்கள்? விரதானுஷ்டானமா? அல்லது தவமா? ஸ்நானமா? மந்திரமா? ஷதங்களா? வித்தையினுடைய சக்தியா? தளராத யௌவன முதலியவற்றின் சக்தியா? ஜபமா? ஹோமமா? அப்படியே மை முதலிய மருந்துகளா? எதனால் அந்தப் பாண்டவர்கள் உன் முகத்தையே பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்? இந்த உண்மையை எனக்குச் சொல்" என்கிறார். மருந்தா, மை போட்டு வைத்திருக்கிறாயா, மணி மந்திர ஷதமா என்று ஸத்யபாமை நுட்பமான தாம்பத்ய விஷயத்தில் கேட்டது பாஞ்சாலிக்குப் பிடிக்கவில்லை. "ஸத்யா! கெட்ட பெண்களுடைய நடையைப் பற்றி என்னிடம் கேட்கிறாயே! துஷ்ட வழியில் என்னால் எப்படிப் பதில் கூற முடியும்? கிருஷ்ணனுடைய மனைவியான நீ எப்படி இப்படி புத்தி கெட்டுப் போயிருக்கிறாய்? என்று ஒரு வித ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் கேட்கிறாள் அவள். "மந்திரத்தினாலும் மூலிகைகளாலும் வசப்படுத்தும் ஒரு மனைவி வீட்டில் கணவன் இருப்பது, பாம்புடன் குடியிருக்கும் வீட்டில் இருப்பது போல அல்லவா ஆகும்!" என்று கூறி அவளைக் கடிந்து கொள்கிறாள். பின்னர் தான் எப்படிப் பாண்டவர் மனதிற்கு உகந்தவளாய் இருக்க முடிகிறது என்பதை மிக விரிவாக விளக்குகிறாள். இந்த விளக்கம் தான் பஞ்ச கன்யாக்களான அஹல்யா, திரௌபதி, தாரா, மண்டோதரி, சீதா ஆகியோரில் திரௌபதி இடம் பெற்றதின் சிறப்பை நமக்கு விளக்குகிறது. "அன்னியப் புருஷனை நினைக்க மாட்டேன். வீட்டிற்கு களைத்து வரும் கணவனை இன்முகத்துடன் வரவேற்பேன். அவர்கள் உறங்கிய பின்னர் உறங்கி அவர்கள் எழு முன்னர் எழுந்திருப்பேன். மாமியாரை விட அதிக அலங்காரம் செய்து கொள்ள மாட்டேன். கணவர் கூறியது அனைவரும் அறிந்த விஷயமாக இருந்தாலும் கூட என் வாயால் முதலில் அதை நான் கூற மாட்டேன். இங்கு அரண்மனையில் லட்சம் வேலைக்காரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரின் பெயரையும் நான் அறிவேன். அவர்களுக்கு உரிய வேலையை நானே தருகிறேன். பாண்டவர்களது சொத்தின் மதிப்பு எனக்கு ஒருத்திக்கு மட்டுமே தெரியும். அன்றாட வரவு செலவை தினமும் பார்க்கிறேன். இப்படி இருக்கையில் என்னைப் போய் கெட்ட பெண்கள் செய்யும் காரியங்களுடன் தொடர்புப் படுத்திவிட்டாயே" பாஞ்சாலியின் அஸ்திரம் போன்ற வாக்கியங்கள் ஸத்யபாமையைக் கூர்மையாகத் தாக்கவே அவள் உடனடியாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறாள். "என்னுடைய குற்றத்தைப் பொறுத்துக் கொள்" என்று வேண்டிய ஸத்ய பாமை, "சகிகளுக்கு பரிகாசத்துடன் கூடிய ஸல்லாபமானது இஷ்டப்படி நடக்கிறது அல்லவா?" என்று கூறி அதை அத்தோடு விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறாள்.

ஒரு உண்மை மனைவிக்கான இலக்கணத்தையும், அவள் எப்படி உண்மையான கவர்ச்சி மூலம் கணவனைக் கவர முடியும் என்பதையும் விவரிக்கும் பாஞ்சாலியின் கவர்ச்சிச் சூத்திரம் வனபர்வத்தில் (திரௌபதி ஸத்யபாமா ஸம்வாத பர்வம் என்ற உபபர்வம்) மிக விளக்கமாக உள்ளது. இதைப் படித்து மங்கையர் கடைப்பிடித்தால் இன்றையக் குடும்ப கோர்ட் கவுன்ஸிலிங்கே இல்லாமல் ஆகி விடும். பெண் சக்தியால் அர்ஜுனனுக்கு உள்ள பத்துப் பெயரில் உள்ள சக்தியையும் அடக்கி ஆள முடியும் என்பதைக் காட்டியதோடு தர்மனின் அறம், பீமனின் பலம் ஆகியவற்றையும் அடக்கி ஆண்ட பெரும் சக்தியாக வியாசர் பாஞ்சாலியை உருவகப்படுத்தி விளக்குவது படித்து உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று!

நன்றி : ஞான ஆலயம் ஜூலை 2007

0 comments:

  © Blogger template Sunset by Ourblogtemplates.com 2008

Back to TOP